thirukkural

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010



பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்


நல்லாதனார்
இயற்றிய
திரிகடுகம்


(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளைக் குறிக்கும். மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இக்கருத்தை,


உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.

என வரும் பாயிரச் செய்யுளும் உணர்த்துகின்றது.

இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் மும்மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக் கூறும் முறை போற்றுதற்குரியது. பொதுக் கருத்துக்கள் ஈற்றடியில் வற்புறுத்தப்படுகின்றன. மூன்றாம் அடியின் ஈற்றில், இம் மூன்றும், இவை மூன்றும் (66, 67, 80, 86, 93, 95), இம் மூவர், இவர் மூவர் (51, 79, 96), என மூவர் (13) என்னும் எண்ணுத்தொகைச் சொற்களில் ஒன்றை அமைத்துள்ளார். இவற்றுள் இம் மூன்றும், இம் மூவர் என்பன மிகுந்துள்ளன. பெரும்பான்மையான பாடல்களில் மூன்று பொருள்களும் எண்ணும்மைகளால் இணைக்கப் பெற்றுள்ளன.

திரிகடுகம் செய்தவர் நல்லாதனார். 'ஆதனார்' என்பது தான் பெயர். 'நல்' என்பது அடைமொழியாகும். கடவுள் வாழ்த்துச் செய்யுள் இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதைப் புலப்படுத்துகின்றது. இவரைக் குறித்த சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றினால், இவர் 'திருத்து' என்னும் ஊரினர் என்பது தெரியவருகிறது. 'திருத்து' என்னும் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. மேலும், இவரை 'செரு அடு தோள் நல்லாதன்' என்றும் பாயிரப் பாடல் குறிப்பதால், போர்த் திறமையிலும் இவர் சிறந்து விளங்கியவராக இருந்திருத்தல் வேண்டும்.


கடவுள் வாழ்த்து


கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.


சகடம் - வண்டி

உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.


நூல்


அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து. 1


அரில் - குற்றம்

அருந்ததி போன்று கற்புடைய பெண்ணின் தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களை அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இம்மூன்றும் திருகடுகம் போன்று சிறந்ததாம்.


தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில். 2


தா இல் - அழிவில்லாத

தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக